கடை ஊழியர்களிடம் நிதி கேட்டு தகராறு
குடவாசலில் கடை ஊழியர்களிடம் நிதி கேட்டு தகராறு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது
குடவாசல்:
குடவாசல் கடைத்தெருவில் இனிப்பு கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருபவர் ஜெயச்சந்திரன். இவரது இனிப்பு கடைக்கு நேற்று முன்தினம் குடவாசல் சின்ன ஆற்றங்கரை தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பால்கிட்டு என்கிற பாஸ்கரன் மற்றும் அதே கட்சியை சேர்ந்த மஞ்சக்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த செந்தில் ஆகிய 2 பேர் வந்து இனிப்பு வாங்கினர். பின்னர், கடை ஊழியர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி துண்டு பிரசுரத்தை கொடுத்து கட்சி வளர்ச்சிக்கு நிதி கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள், கடையின் உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.
அதனை ஏற்க மறுத்த அவர்கள் ஊழியர்களிடம் தகராறு செய்யவே, குறைந்த அளவு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த கட்சியினர் கடையில் இருந்த இனிப்பு உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி விட்டதோடு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன், வர்த்தக நல கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதன்பேரில், வர்த்தக நல கழகத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பிரபாகரன் மற்றும் வர்த்தகர்கள் குடவாசல் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தங்களது கடைகளை அடைத்தனர். இந்தநிலையில், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பால்கிட்டு, செந்தில் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.