ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகித உயர்வால் ஏற்படும் தாக்கங்கள் என்னென்ன ?
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளதால் யார்-யாருக்கு பாதிப்பு வரும்? என பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
விருதுநகர்,
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளதால் யார்-யாருக்கு பாதிப்பு வரும்? என பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-
வட்டி வீதம் உயர்வு
ரிசர்வ் வங்கி 45 மாதங்களுக்கு பிறகு அதாவது, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு பின் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தி உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2020 மே மாதத்திற்கு பின் வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதம் என்ற நிலையிலேயே இருந்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியிலிருந்த பொருளாதாரத்தை மீட்க பணப்புழக்கம் அவசியமாக உள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் உயர்ந்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் மக்கள் மேலும் பாதிக்க தொடங்கி உள்ளனர். எனவே பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டியை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை அறிவித்துள்ளது.
கால அவகாசம்
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு வரும் 21-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றாலும் வங்கிகள் தன்னுடைய வட்டிவிகித உயர்வு அறிவிப்பை வெளியிட குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. பெரிய வங்கிகள் தனது வட்டி விகித உயர்வை அறிவித்தபின்பே பிற வங்கியில் தங்களது வட்டி வீதம் உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளது.
எனவே தற்போதே இதற்காக பயப்பட தேவையில்லை. புதிதாக வங்கிகளில் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால் சற்று காலதாமதம் செய்யலாம். வங்கிகளின் புதிய வட்டி வீத அறிவிப்புகளுக்கு பிறகு முடிவுகளை எடுக்கலாம். ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு தனி நபர்கடன்தாரர்களை பாதிக்காது.
பங்குச்சந்தை
அதே நேரத்தில் வீட்டு கடன் வாங்கியவர்களில் 9 சதவீதத்திற்கு மேல் வட்டி செலுத்துபவர்களுக்கு வட்டி உயர வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வினால் டெபாசிட்டுகளுக்கு வட்டி வீதம் உயர வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக அரசு முதலீடு சேமிப்பு திட்டத்துக்கான வட்டி உயர வாய்ப்பு உள்ளது. வட்டியை நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கும், இதர அரசு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டிஉயர வாய்ப்புள்ளது. குறுகிய காலத்தில் கடன் பண்டுகள் லாபம் தரும். ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை சார்ந்த பண்டுகள் குறுகிய காலத்தில் பின்னடைவை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.