கல்லூரி பஸ் மரத்தில் மோதி 26 மாணவிகள் படுகாயம்
கல்லூரி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் அந்த பஸ்சில் பயணித்த மாணவிகள் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தூர்,
கல்லூரி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் அந்த பஸ்சில் பயணித்த மாணவிகள் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரத்தில் மோதிய கல்லூரி பஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கரிசல்குளம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 60 மாணவிகள், சாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு, அந்த கல்லூரியின் பஸ்சில் சென்று வருகின்றனர்.
வழக்கம்போல் நேற்று காலையில் அந்த கல்லூரி பஸ்சில் மாணவிகள் பயணித்து வந்தனர். பஸ்சை திருவேங்கடம் பகுதியை சேர்ந்த கணபதி (வயது 63) ஓட்டி வந்தார்.
சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் அந்த பஸ் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ்சுக்குள் சிக்கிய மாணவிகள் படுகாயம் அடைந்து தங்களை காப்பாற்றும்படி அலறினர்.
26 மாணவிகள் காயம்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். போலீசாரும் விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் ஸ்வேதா (22), மாதவி (21), ரேணுகாதேவி (21), சாந்தாராணி (21), பிரியா (22), மஞ்சுளா (22), முக்தீஸ்வரி (20), சந்தனமாரி (21), அனுஷா (19), மகாலட்சுமி (21) உள்பட 26 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 9 மாணவிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மரத்தில் மோதி நொறுங்கிய பஸ்சை மீட்டனர். இ்ந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலெக்டர் ஆறுதல்
சம்பவ இடத்தை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, தாசில்தார் சீதாலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, காயமடைந்த மாணவிகளை சாத்தூர் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவிகளுக்கான சிகிச்சை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். கல்லூரி பஸ், மரத்தில் மோதி 26 மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவி ஸ்வேதா மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.