கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம்

ஊட்டியில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இடுபொருட்கள் பெற அலைக்கழிக்கப்படுவதாக கூறி அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-06 18:26 GMT
ஊட்டி

ஊட்டியில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இடுபொருட்கள் பெற அலைக்கழிக்கப்படுவதாக கூறி அதிகாரிகளுடன், விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்

ஊட்டியில் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது‌. மேலும் இடுபொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் இன்று விவசாயிகள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. 

அலைக்கழிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் இருந்து கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உரம் உள்பட இடுபொருட்கள் வாங்க ரசீது கொடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு வந்தால், ‘இன்று போய் நாளை வா’ என்ற ரீதியில் ஒரு வாரமாக அலைக்கழிக்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 100 பேர் வரை வந்தால் 30 பேருக்கு மட்டுமே உரம் கொடுக்கின்றனர். இதனால் உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாடகை வாகனத்துடன் வரும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

மேலும் அந்த வாகனங்களுக்கு நாங்கள் வாடகையும் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே சரியாக தேதி நிர்ணயித்து, எங்களுக்கு முறையாக உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எடக்காடு, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்க கிளைகளிலும் இடுபொருட்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுதல் உரம் கேட்டு கடிதம்

இதுகுறித்து கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- கோவையில் உள்ள பிரதான அலுவலகத்தில் இருந்துதான் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வருகிறது‌. சில சமயங்களில் நாம் கேட்பதை விட பாதி அளவுதான் வருகிறது. தற்போது உரம் முடிந்து விட்டதால், கூடுதலாக உரம் கேட்டு கோவைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 

ஆனாலும் இருக்கும் உர அளவை கொண்டு தினமும் 50 பேருக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை உரம் கொடுக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ரூ.6 கோடிக்கு இடுபொருட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று இடுபொருட்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்