வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
அரசு புறம்போக்கில் வசித்து வருபவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
விழுப்புரம்
ஆர்ப்பாட்டம்
அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு கொடுக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தியது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை 11 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சுப்பிர மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், கீதா, முத்துக்குமரன், சங்கரன், மூர்த்தி, வேல்மாறன், ராஜேந்திரன், அறிவழகன், முருகன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி
நீர்நிலை புறம்போக்கில் வசிக்கின்ற மக்களுக்கு வகை மாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மாற்று இடம் கொடுக்கும் வரை வீடுகளை அப்புறப்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பகல் 12 மணியளவில் மனு கொடுப்பதற்காக அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் நோக்கி திரண்டு வந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களிடம் சென்று குறிப்பிட்ட சிலர் மட்டும் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு வரும்படி கூறினர். அதை ஏற்க மறுத்து அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
முற்றுகை
இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாக நுழைவுவாயிலின் 2 கதவுகளையும் போலீசார் இழுத்து மூடி அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் இங்கு நேரில் வந்து எங்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அதிகாரிகள், இது குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் 12.45 மணியளவில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.