சிறு குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம்
சிறு குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம்
திருப்பூர்,
தாசில்தார் அலுவலகங்களில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வாழைகள் சேதம்
திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து முறையிட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார்:-
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் அவினாசி பகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டைகளும் பயன்பெறும் வகையில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் கிடைக்கச்செய்ய வேண்டும். அவினாசி பகுதியில் நடுவச்சேரி, வேட்டுவபாளையம், ராமநாதபுரம், தெக்கலூர் ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் கடும் காற்றுக்கு சேதமடைந்தன. தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். சேவூர் பகுதியில் 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் தற்போது 7 மணி நேரமே கிடைக்கிறது. மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊத்துக்குளி-சென்னிமலை சாலை ரெயில்வே நுழைவுபாலத்துக்கு கீழ் மழைநீர் தேங்கும்போது போக்குவரத்து பாதிக்கிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு விவசாயிகள் சான்று
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க முன்னாள் தலைவர் பொன்னுசாமி:-
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, ஊத்துக்குளி தாலுகா பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் அதிகம் உள்ளனர். தங்களுக்கு சிறு, குறு விவசாயிகள் சான்று பெற கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அலைய வேண்டியுள்ளது. எனவே தாசில்தார் அலுவலகங்களில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
தெற்கு தாசில்தார் அலுவலகத்துக்கு செல்லும் சந்திராபுரம் பிரிவில் இருந்து செவந்தாம்பாளையம் செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். என்று பேசினார்கள்.
பத்திரப்பதிவு அலுவலகம்
பத்திரப்பதிவு அலுவலகம் நெருப்பெரிச்சலில் இருப்பதால் இடுவாய், மங்கலம், ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த கிராமங்களுக்கு மட்டும் பத்திரப்பதிவு அலுவலகத்தை அருகில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள்.