பழனி அருகே கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை
பழனி அருகே, கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்தனர்.
பழனி :
இறைச்சி ஏற்றுமதி நிறுவனம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் ‘சவர்மா' சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அந்த கடையில் ‘சவர்மா' சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள ஓட்டல்கள், சிக்கன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் தலைமையிலான குழுவினர், பழனி அருகே அத்திமரத்துவலசு பகுதியில் உள்ள 2 தனியார் கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறைச்சி உற்பத்தி, சுத்திகரிப்பு, பேக்கிங் செய்யும் விதம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பழனி நகரில் உள்ள ஓட்டல்கள், ‘சவர்மா' விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில், சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறுகையில், அத்திமரத்துவலசு பகுதியில் உள்ள இறைச்சி நிறுவனத்தில் சுகாதாரமான முறையில் இறைச்சி உற்பத்தி செய்து பேக்கிங் செய்யப்படுகிறதா?, தொழிலாளர்களிடம் உடல்தகுதி சான்று உள்ளதா? என சோதனை செய்தோம்.
இது தொடர்பான ஆய்வறிக்கை, மத்திய-மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரக்குழுவினர் ஆய்வு செய்வர். மேலும் ஓட்டல், ‘சவர்மா' கடைகளில் சுத்தமான இறைச்சியை பயன்படுத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது பழனி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செல்லத்துரை (நகர்), சரவணக்குமார் (வட்டாரம்) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
நத்தம்
இதேபோல் நத்தம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் தலைமையில், பஸ் நிலைய பகுதியில் உள்ள ஓட்டல்களில் இன்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் வைத்திருந்த 2 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.