கோவில் திருவிழா நடத்துவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை
கோவில் திருவிழா நடத்துவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகா ஓங்கப்பாடி அடுத்த சென்ராயன் கொட்டாய் கிராமத்தில் சித்தேரி அம்மன் கோவில் திருவிழாவில் ஒரு தரப்பினர் மட்டும் கரகம் எடுத்து வருவதாகவும், மற்றொரு தரப்பினருக்கு அதை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து திருவிழாவை நடத்தி வருவதாகவும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இந்த வருடம் நடைபெறும் திருவிழாவை ஒரு தரப்பினர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில், மண்டல துணை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் என்பவர் தரப்பில் 10 பேரும், எதிர்த் தரப்பினர் 10 பேரும் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் எந்தவித பிரச்சினையும் வந்தால் நாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம் என்று எழுதி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.