கூடுதல் வருவாய் கிடைப்பதால் நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

நெகமம் பகுதியில் கூடுதல் வருவாய் கிடைப்பதால் நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2022-05-06 16:33 GMT
நெகமம்

நெகமம் பகுதியில் கூடுதல் வருவாய் கிடைப்பதால் நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

நாட்டுக்கோழி வளர்ப்பு

நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதியில் தென்னை சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் மற்றும் தேங்காய் உற்பத்தியாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்தது. இதில், பண்ணைகளில் கறிக்கோழி வளர்ப்பு அதிகரித்தது. இந்தநிலையில், பல்வேறு காரணங்களால் மீண்டும் நாட்டுக்கோழி, சேவல் வளர்ப்பில் ஆர்வம் அதிகரித்தது. 
இதனை மேலும் மேம்படுத்துவதற்காக கால்நடைத்துறை சார்பில், புறக்கடை வளர்ப்பு என்ற அடிப்படையில், மானியத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது. வட்டார வாரியாக, கட்டுச்சேவல், கிளி மூக்குச்சேவல், பெருவெடை கோழி, சேவல் வளர்ப்புக்கான சமூக வலை தள குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விற்பனை மற்றும் பராமரிப்பு தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன. 

பாரம்பரிய முறைப்படி

கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு காரணமாக, நகரங்களுக்குச்சென்று இறைச்சி வாங்குவது குறைந்து, தங்கள் கிராமங்களிலேயே தேவையான இறைச்சி வாங்க ஆர்வம் காட்டினர். இதனால், நாட்டுக்கோழி, சேவல்களுக்கான தேவை அதிகரித்தது.  தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால் அந்த ரக இறைச்சியின் விலை, சில மாதங்களில் பல மடங்கு உயர்ந்தது. இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள், தென்னந்தோப்புகளில் மீண்டும், நாட்டுக்கோழி வளர்ப்பை தொடங்கி உள்ளனர். சிலர் இதற்கென பிரத்யேகமாக, வளர்ப்பு மனை அமைத்து, அதிகளவு கோழிகளை வளர்க்கின்றனர். பலர் பாரம்பரிய முறைப்படி சிறிய கூண்டு, அமைத்து பரவலாக கோழிகளை மேய்ச்சலுக்கு விடும் முறையை பின்பற்றி வருகின்றனர். 

கூடுதல் வருவாய் 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- நெகமம் பகுதியில் தற்போது நாட்டுக் கோழி, சேவல்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. அதனால் நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். மேலும் ஏராளமான விவசாயிகள் தென்னை வளர்ப்புக்கு அடுத்தப்படியாக கோழி வளர்ப்பில் ஈடுபட முனைப்பு காட்டி வருகிறார்கள். மேலும் கால்நடை வளர்ப்பிலும் லாபம் கிடைத்து வருகிறது. இங்கிருந்து ஏராளமான நாட்டுக்கோழிகள் வளர்ப்பு மற்றும் இறைச்சிக்கு வாங்கிச் செல்கிறார்கள். மேலும் சண்டை சேவல்களும் வளர்க்கப்படுகிறது. இதனையும் பொதுமக்கள் குறிப்பாக வாலிபர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். இதனால் நாட்டுக்கோழி வளர்ப்பில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதையொட்டி பாரம்பரிய முறைப்படி நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் புறாக்கள் வளர்ப்பிலும் ஒருசிலர் ஈடுபட்டு வருகிறார்கள். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்