செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 200 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 200 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்து உள்ளார்.
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 200 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்து உள்ளார்.
3 ஆயிரத்து 900 மூட்டைகள்
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அரவை கொப்பரை கிலோ ரூ.105,90-க்கும், பந்து கொப்பரை ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இதுவரை 134 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 3 ஆயிரத்து 900 மூட்டைகள் தேங்காய் கொப்பரை ரூ.2 கோடியே 6 லட்சத்து 51 ஆயிரத்து 300-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொப்பரை உற்பத்தி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. காங்கேயம், வெள்ளக்கோவில் வெளிமார்க்கெட்டை விட தற்போது, அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் தங்கள் கொப்பரைகளை அருகில் உள்ள செஞ்சேரி, நெகமம், பொள்ளாச்சி அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
4 ஆயிரம் மெட்ரிக் டன் இலக்கு
இதுகுறித்து செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் இஷாக் கூறியதாவது:-.செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 200 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் கொப்பரை விற்பனை செய்ய இதுவரை 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி புத்தகம் நகல் ஆகியவைகளை கொண்டு வந்து முன்பதிவு செய்துள்ளனர். எங்கள் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கொப்பரை உற்பத்தி விவசாயிகள் தங்கள் கொப்பரைகளை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விற்பனைக்குகொண்டுவரலாம். இவ்வாறு அவர் கூறினார்.