திருட்டு வழக்குகளில் 2 வாலிபர்கள் கைது; ரூ.5½ லட்சம், வாகனங்கள் பறிமுதல்
திருட்டு வழக்குகளில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5½ லட்சம், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பெங்களூரு: பெங்களூரு பேடரஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெயர் கார்த்திக் மற்றும் கோபி என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவார்கள். அப்போது பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவதை 2 பேரும் தொழிலாக வைத்திருந்தார்கள்.
அதன்படி, கடந்த 4-ந் தேதி பேடரஹள்ளி பகுதியில் சென்ற காரின் டயர் பஞ்சராகி இருப்பதாக உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, காரில் இருந்த ரூ.8 லட்சத்தை கார்த்திக்கும், கோபியும் திருடி சென்றிருந்தனர். இதுபோன்று, கவனத்தை திசை திருப்பி பல்வேறு நபர்களிடம் பணம், நகைகளை திருடி வந்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.5½ லட்சம், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கார்த்திக், கோபி மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.