ஒன்றியக்குழு கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கணியம்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-05-06 16:21 GMT
அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் திவ்யாக மல்பிரசாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் வரவேற்றார். கவுன்சிலர்கள் சீனிவாசன், வேலாயுதம், லதா, மணிமேகலை, சகாதேவன், ஜெயலட்சுமி ஏழுமலை, விஸ்வநாதன், தங்கம்மாள், எழிலரசி அருள், வனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் பொறியாளர் மீது குற்றச்சாட்டை கூறினர். தங்கள் கிராமத்தில் தங்களுக்கே தெரியாமல் அரசின் பணிகள் நடப்பதாகவும், தங்களை கிராம சபை கூட்டத்துக்கு அழைப்பதில்லை, ஊராட்சிகள் மூலம் நடைபெறும் திட்டங்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. பொறியாளர் தன்னிச்சையாக பணிகளை செய்து வருகிறார். எனவே உடனடியாக அவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல் பாழடைந்த நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை இடிப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி பா.ம.க. கவுன்சிலர்கள் வேலாயுதம் மற்றும் ஜெயலட்சுமி ஏழுமலை ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க. கவுன்சிலர் நதியா புருஷோத்தமன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்  விஸ்வநாதன் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு அதிகாரிகள் அரசு பணத்தை வீணடிப்பதாகவும், பொறியாளரை மாற்றவும் கோரிக்கை விடுத்தார்.
இதனால் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்