கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளை மீண்டும் திறந்தால் நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் தகவல்
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் கோர்ட்டு உத்தரவின்படி ‘சீல்’ வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளை மீண்டும் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
ஒன்றியக்குழு கூட்டம்
கொடைக்கானல் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் சுவேதாராணி கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா வரவேற்றார்.
முதலாவதாக பேசிய ரஞ்சித்குமார் (பா.ஜ.க) நான் வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. எனவே இதைகண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது.
தங்கும் விடுதிகள்
கவுன்சிலர் முத்துகிருஷ்ணன்:-கோர்ட்டு உத்தரவின்படி வில்பட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டன. ஆனால் இதை மீறி யாருடைய உத்தரவும் இன்றி விடுதியை திறந்து நடத்துகின்றனர் எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இதுகுறித்து அறிக்கை வழங்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அதிகாரி:- மொத்தம் 59 கட்டிடங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. இவற்றில் 25 தங்கும் விடுதிகளுக்கு பராமரிப்பதற்கு மட்டுமே கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இதை மீறி தங்கும் விடுதிகளை திறந்து நடத்தினால் அது குறித்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் ராசிகா:- பள்ளங்கி கோம்பை எஸ்.எஸ்.காலனி முதல் பெருங்காடு வரை உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளதால் பள்ளி வேன் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளங்கி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் தாழ்வாக உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்:-15வது நிதிக்குழு மானியம் மூலம் விரைவில் இந்த சாலை சீரமைக்கப்படும்.
குடிநீர்
கவுன்சிலர் அபிராமி: அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் பல கிராமங்களுக்கு இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். கிராம பகுதியில் உள்ள மின் கம்பங்கள் பல சேதம் ஆகியுள்ளன. இந்த மின் கம்பங்களை மாற்றுவதுடன் மின்கம்பிகளின் மீது படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும்.
தலைவர்:-கொடைக்கானல் ஒன்றியத்தில் 145 குக்கிராமங்கள் உள்ளன. இதில் தினசரி 55 லிட்டர் குடிநீர் வழங்கக் கூடிய 23 கிராமங்கள் முதற்கட்டமாக கண்டறியப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் உருவாக்கப்படும். இந்த வருட இறுதிக்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கார்த்திகேயன், பூங்கொடி, தமிழரசி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) சுப்பிரமணி நன்றி கூறினார்.