முன்னாள் முதல்-மந்திரியுடன் பசவராஜ் பொம்மை திடீர் சந்திப்பு
முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை பசவராஜ்பொம்மை திடீரென்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு:
திடீர் சந்திப்பு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீடு பெங்களூரு சதாசிவ நகரில் உள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பலர் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள். குறிப்பாக கோலார், மண்டியாவில் இருந்து அதிகம் பேர் பா.ஜனதாவுக்கு வருகிறார்கள். அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மைசூரு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கட்சியில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.
மண்டியாவில் இளம் தலைவர்
அதனால் மண்டியாவில் இருந்து ஒரு இளம் தலைவர் எங்கள் கட்சியில் உருவாவார். மண்டியாவில் பா.ஜனதா மாநாடு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம்.
எஸ்.டி.ஜெயராம் மட்டுமின்றி பலரும் பா.ஜனதாவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து கூறினேன். அரசுக்கும், கர்நாடகத்திற்கும் அவரது வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.