ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 12 கிலோ கோழி இறைச்சி அழிப்பு
ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 12 கிலோ கோழி இறைச்சி அழிக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி தில்லைநகர் வயலூர்ரோடு மற்றும் பஸ் நிறுத்தம் பகுதியில் ஷவர்மா விற்பனை செய்யும் 21 கடைகளில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி சுமார் 12 கிலோ வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் அன்றையதினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ, வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.