தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடக்கம்

தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது.

Update: 2022-05-05 23:27 GMT
மலைக்கோட்டை:

தேர்த்திருவிழா
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் உச்சிபிள்ளையாருக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை கடக லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. இரவில் கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இரவில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
வருகிற 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
வேடுபறி ஐதீகம்
வருகிற 12-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கில் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம் நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
14-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. இரவில் கொடியிறக்கம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்