இன்று தொடங்குகிறது: 182 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு-45,519 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சேலம் மாவட்டத்தில் 182 மையங்களில் 45 ஆயிரத்து 519 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

Update: 2022-05-05 23:03 GMT
சேலம்:
இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சேலம் மாவட்டத்தில் 182 மையங்களில் 45 ஆயிரத்து 519 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
182 மையங்கள்
சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 30-ந் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 182 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது 176 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித்தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. 
இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 23 ஆயிரத்து 302 மாணவர்கள், 22 ஆயிரத்து 217 மாணவிகள் என மொத்தம் 45 ஆயிரத்து 519 தேர்வர்கள் எழுதுகின்றனர். 
தயார் நிலை
இத்தேர்வுக்கு 30 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 35 வழித்தட அலுவலர்கள், 182 முதன்மை கண்காணிப்பாளர்கள், 182 துறை அலுவலர்கள், 2,300 அறை கண்காணிப்பாளர்கள், 350 சொல்வதை எழுதுபவர், 413 ஆசிரியர் இல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 
மேலும், தேர்வுகள் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கும், தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்