பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-05 22:52 GMT
சேலம்:
பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் பொருட்கள்
சேலம் மாவட்டம், காமநாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அந்த ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று பொருட்கள் வாங்க சிலர் ரேஷன் கடைக்கு சென்றனர்.
அப்போது கைரேகை பதியப்படும் எந்திரம் பழுதாகி உள்ளது. எனவே தற்போது ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது என்று ரேஷன் கடை ஊழியர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிலர் ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இருப்பு இல்லை
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘ரேஷன் பொருட்கள் சரியாக வழங்குவதில்லை. எப்போது வந்தாலும் எந்திரம் சரி இல்லை. பொருட்கள் இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். இதனால் ஒரு முறை வரவேண்டிய ரேஷன் கடைக்கு பல முறை வரும் நிலை உள்ளது. பொருட்கள் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எனவே பழுதான எந்திரத்தை சரி செய்து, தினமும் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்