மல்லூர் அருகே நகை மதிப்பீட்டாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
மல்லூர் அருகே நகை மதிப்பீட்டாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராமம் சீரடி சாய் நகரில் வசித்து வருபவர் பரமசிவம் (வயது 55). இவர் சேலம் இரும்பாலையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி பரமசிவம் குடும்பத்துடன் திருச்செங்கோட்டில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தனர். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சேலம் ரூரல் துணை சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் பரமசிவம் வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மல்லூர் கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் கோழி என்கிற கோகுல்ராஜ் (23) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.