தலைவாசல் அருகே பட்டப்பகலில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு
தலைவாசல் அருகே பட்டப்பகலில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே பட்டப்பகலில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கூட்டுறவு சங்க செயலாளர்
தலைவாசல் அருகே நாவலூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் வேலுமணி (வயது 46). இவருடைய மனைவி சங்கீதா (36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கீதா காலை 8.15 மணிக்கு உறவினரை பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார். வேலுமணி வேலைக்கு சென்று விட்டார். 2 மகள்களும் பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனிடையே மாலை 3 மணிக்கு சங்க செயலாளர் வேலுமணி வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.44 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இது குறித்து வீரகனூர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.