ஓடையில் கார் பாய்ந்து வாலிபர் பலி
சிவகிரி அருகே ஓடையில் கார் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
சிவகிரி:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா எலம்பலுர் புனக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபுகுட்டன். இவருடைய மகன் ஸ்ரீஜித் (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராேகஷ் (32). இவர் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மதுரைக்கு காரில் சென்று விட்டு, இரவில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்குள்ள ஓடைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக கார் மோதி, ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஸ்ரீஜித், ராகேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சிவகிரி போலீசார் விரைந்து சென்று, அவர்களை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் பரிதாபமாக இறந்தார். ராகேசுக்கு ெதாடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஸ்ரீஜித்துக்கு மனைவி மற்றும் தியா (8) என்ற மகளும், தியான் (4) என்ற மகனும் உள்ளனர்.