காண்டிராக்டர் கொலையில் அண்ணன் உள்பட 3 பேர் கைது
புளியங்குடி அருகே, காண்டிராக்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன்கள் வெள்ளத்துரை (வயது 50), சுரேஷ் (46). இதில் வெள்ளத்துரை கீழப்புதூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி அமுதா (48), மகன் வசந்த் (27). சுரேஷ், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டவர் (மின்கோபுரம்) லைன் காண்டிராக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கண்மணி (40), மகன் விஜய் (22), மகள் பிரியதர்ஷினி (19). இதில் பிரியதர்ஷினிக்கு திருமணம் ஆகிவிட்டது.
சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளார் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கசாமி மகன் குமார் (46) என்பவரிடம் இருந்து கீழப்புதூரில் 5 சென்ட் நிலம் வாங்குவதற்காக அவரிடம் முன்பணம் கொடுத்துள்ளார். குமார் அமுதாவின் தம்பி ஆவார். முன் பணத்தை பெற்றுக்கொண்ட குமார் நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் பலமுறை குமாரிடம், நிலத்தை சீக்கிரமாக கிரையம் முடித்து தருமாறு வற்புறுத்தி உள்ளார்.
அப்போது குமார், தனது அக்காள் அமுதா வந்து கையெழுத்து போட்டால்தான் கிரையம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சுரேஷ், தனது அண்ணன் மனைவி அமுதாவிடம் கேட்டபோது, குமார் வந்தால் நானும் உடன் வந்து கிரையம் செய்துதர கையெழுத்துப் போடுவதாக கூறியுள்ளார். இவ்வாறு அமுதாவும், குமாரும் பல்வேறு காரணங்களை கூறி நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதை தாமதித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ், தனது குடும்பத்தினருடன் அவரது மனைவியின் ஊரான முகவூர் தளவாய் புரத்திற்கு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சுரேஷ், தனது அண்ணன் வெள்ளத்துரை வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த குமார், அமுதா ஆகியோரிடம் நிலத்தை விரைவில் கிரையம் செய்து தர வற்புறுத்தினார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் வெள்ளத்துரை, அவரது மனைவி அமுதா, இவர்களது மகன் வசந்த் (27), குமார் (46) ஆகியோர் சுரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து, மார்பு, முதுகு, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்ட சுரேஷ் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரை, வசந்த், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள அமுதாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.