மதுரை ஆதீனத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்-போலீஸ் கமிஷனரிடம் மனு
மதுரை ஆதீனத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் மனு அளித்தனர்.
மதுரை,
மதுரை ஆதீனத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் மனு அளித்தனர்.
பாரம்பரியமிக்கது
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள் ராஜேந்திரன், நீலமேகம், கவுரிசங்கர், அமிழ்தன், நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு ஆகியோர் நேற்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை ஆதீன மடம் பாரம்பரியமிக்கது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பராமச்சாரியார் உயிருக்கும், ஆதீன மடத்திற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்து விரோத சக்திகள் எந்த நேரமும் மதுரை ஆதீனம் மற்றும் அவரது மடத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மத மோதல்கள் ஏற்படும் நிலை இருக்கிறது.
இது தொடர்பாக ஆதீனத்தை நேரில் சந்தித்து நிலவரம் அறிந்தோம். அவரும் உரிய பாதுகாப்பு கேட்டு பேட்டி அளித்துள்ளார். எனவே மதுரை ஆதீனத்திற்கும், ஆதீன மடத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
அந்த மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக ெதரிவித்ததாக வக்கீல்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் மதுரை ஆதீன மடத்திற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் உடனே அமர்த்தப்பட்டனர்.