திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

Update: 2022-05-05 20:00 GMT
திருப்பத்தூர், 
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வருகிற 14-ந்தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
 பிரம்மோற்சவ விழா
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  
இந்தஆண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சவுமியநாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பின்னர் கொடியேற்றப்பட்டது. 
அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி தினந்தோறும் இரவு பெருமாள் சிறப்பு அலங் காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி சிம்மவாகனம், அனுமார் வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 
தேரோட்டம்
வருகிற 10-ந்தேதி அன்று வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மாலை சூர்ணாபிஷேகம் மற்றும் தங்க தோளுக்கினியாள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14-ந்தேதி காலையில் ரிஷப வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.50 மணி முதல் 5.25 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
 15-ந்தேதி புஷ்பயாகம் வாசித்தல் நிகழ்ச்சியும், ஆஸ்தான எழுந்தருளல் நிகழ்ச்சியும் மறுநாள் பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்