ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம், பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.

Update: 2022-05-05 18:37 GMT
பெரம்பலூர்
3½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி லட்சுமி (வயது 31). இவர் தனது வீட்டில் நடைபெறவுள்ள காதணி விழாவிற்காக அருகே நக்கசேலம் கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு பத்திரிகை வைப்பதற்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்ணன் மனைவி குமாரியை(49) நேற்று மாலை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது பெரம்பலூர்-துறையூர் சாலை அம்மாபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்களில், பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் குமாரியின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தார்.
படுகாயம்
பின்னர் குமாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த குமாரி ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்ட லட்சுமி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குமாரியை மீட்டு அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைவீச்சு
தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்கள் கருப்பு நிறத்தில் சிகப்பு நிற கோடு போட்ட டீ-சர்ட் அணிந்திருந்தாக குமாரி போலீசாரிடம் தெரிவித்தார். இது தொடர்பான புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர்-துறையூர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்