சரக்கு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி புதுமாப்பிள்ளை பலி

தளவாபாளையத்தில் சரக்கு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2022-05-05 18:05 GMT
கரூர்
நொய்யல், 
தனியார் பஸ் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி டவுன் தெருவை சேர்ந்த சேர்ந்தவர் நாசீர் (வயது 24). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணாகி 6 மாதங்கள் ஆகிறது. இவரும், அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாட்சா (34) என்பவரும் சரக்கு ஆட்டோவில் கொத்தமல்லி கீரைகளை ஏற்றி கொண்டு சேலம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.சரக்கு ஆட்டோவை நாசீர் ஓட்டி வந்தார். 
சாதிக் பாட்சா அமர்ந்திருந்தார். கரூர் மாவட்டம் தளவாபாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, கரூரில் இருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது மோதியது.
டிரைவர் பலி
இதில், சரக்கு ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் நாசீர், சாதிக்பாட்சா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு நசீரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாதிக்பாட்சாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 பயணிகள் காயம்
தனியார் பஸ்சில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி, தனியார் பஸ் டிரைவர்  புகழூர் நான்கு ரோடு அருகே உள்ள முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (42) என்பவர் மீது வழக்குப்பதிந்து, அந்த பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்