14,082 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 14,082 மாணவ, மாணவிகள் எழுதினர். 801 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேனி:
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 433 மாணவர்கள், 7 ஆயிரத்து 450 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 883 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
கல்வி மாவட்டம் வாரியாக பெரியகுளத்தில் 3,867 மாணவ, மாணவிகளும், தேனியில் 6,002 மாணவ, மாணவிகளும், உத்தமபாளையத்தில் 5,014 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். நேற்று காலை 10 மணியளவில் தேர்வு தொடங்கியது.
இதற்காக காலை 7 மணிக்கெல்லாம் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர். தேர்வு மையங்களுக்கு வெளியே அமர்ந்து இருந்து கடைசி நேர படிப்பில் மாணவ, மாணவிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
801 பேர் எழுதவில்லை
பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உடல் வெப்பநிலை அறியும் கருவி மூலம் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டது. அதன்பிறகு தேர்வு அறைக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர்.
மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 14 ஆயிரத்து 82 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அனுமதி பெற்றவர்களில் 801 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 275 பேர், பெரியகுளத்தில் 225 பேர், உத்தமபாளையத்தில் 301 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதுபோல் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களாக தேர்வு எழுத 601 பேர் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் தேர்வு எழுதினர்.
மாற்றுத்திறனாளிகள்
பார்வையற்ற, பார்வைக்குறைபாடுடைய மற்றும் இதர குறைபாடுகளுடன் தேர்வு எழுத இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 55 பேருக்கு, தேர்வு எழுதுவதற்காக உதவியாளராக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆசிரியர்கள் வினாத்தாளில் உள்ள கேள்விகளை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாசித்துக் காட்டினர். அதற்கு மாணவ, மாணவிகள் கூறிய பதிலை ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினர். அந்த வகையில் தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியும், 3 மாணவர்களும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்தால் கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படைகளை சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதுபோல், தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.