முட்புதரில் வீசப்பட்டு கிடந்த பெண் குழந்தை உயிருடன் மீட்பு
பேரணாம்பட்டு அருகே முட்புதரில் வீசப்பட்டு கிடந்த பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அடுத்த மேல்கொத்த குப்பம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் காலை 6 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற பொது மக்கள் அங்கு சென்று பார்த்தபோது பச்சிளம்பெண் குழந்தை ஒன்று ரத்த கறையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தி பெண் குழந்தையை மீட்டு மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். குழந்தை 2 கிலோ எடை இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கள்ளகாதலில் பிறந்ததல் வீசப்பட்டதா, அல்லது பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா, குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.