தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் மீண்டும் அதே வகுப்பில் மாணவர் படித்தது தொடர்பாக வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-05 16:46 GMT
குடியாத்தம்

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் மீண்டும் அதே வகுப்பில் மாணவர் படித்தது தொடர்பாக வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றும் அதே வகுப்பில் படித்த மாணவர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 491 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 17 ஆசிரியர்கள் உள்ளனர். 100 சதவீதம் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் அதே ஊரான வளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புஷ்பராஜ் -சங்கீதா தம்பதியின் மகன் கணேசன் (வயது 16) கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு படித்தான். கொரோனா காரணமாக தமிழக அரசு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

அதில் மாணவன் கணேசனும் தேர்ச்சி பெற்றிருந்தான். அதனை தொடர்ந்து தற்போதைய கல்வி ஆண்டில் அந்த மாணவன் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் தான் தேர்ச்சி பெற்றது தெரியாமல் தொடர்ந்து இந்த ஆண்டும் 10-ம் வகுப்பிலேயே படித்து வந்துள்ளான். பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கணேசனை 11-ம் வகுப்பில் சேர்க்காமல், 10-ம் வகுப்பிலேயே சேர்த்து பாடம் நடத்தி, மெத்தன போக்காக இருந்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் கடந்த வாரம் இந்த ஆண்டிற்கான 10-ம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகளுக்கு வந்துள்ளது. ஹால் டிக்கெட்டை சரிபார்த்தபோது மாணவன் கணேசன் கடந்த ஆண்டே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால், உயரதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்து விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவன் கணேசனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

 தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

இதனை தொடர்ந்து மாணவன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் மீண்டும் 10-ம் வகுப்பில் படித்த போது அதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராஜன் மற்றும் பள்ளி வகுப்பாசிரியர் குணசேகரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் அந்த மாணவனுக்கு பாடம் நடத்திய ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு துறைரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 மாணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 10-ம் வகுப்பு படித்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் கணேசன் தொழிற் கல்வி படிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவனை தொழிற்கல்வி படிப்பில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்