மர்ம விலங்கு கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்தன

மர்ம விலங்கு கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்தன

Update: 2022-05-05 16:20 GMT
உடுமலை:
உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 8 ஆடுகள் செத்தன. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கூறப்படுவதாவது:-
இந்திராநகர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியைச்சேர்ந்தவர் ஈஸ்வரன் விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் ஆடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஈஸ்வரன் வழக்கம்போல் நேற்று காலை, அங்கு சென்றபோது அங்கு கட்டி வைத்திருந்த 8 ஆடுகள் கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதிகள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்து கிடந்தன. இரவு நேரத்தில் ஏதாவது விலங்கு வந்து கடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேமராக்கள் 
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் 5 இடங்களில் வனப்பகுதியில் பொருத்தப்படும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
 அந்த பகுதியில் விலங்கின் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர். விலங்கு கடித்ததில் 8 ஆடுகள் செத்துக்கிடந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்