பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19,614 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தோ்வு தொடங்கியது. 19 ஆயிரத்து 614 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.

Update: 2022-05-05 16:20 GMT
கள்ளக்குறிச்சி, 

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 39 தேர்வு மையங்களிலும், திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களும், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்கள் என மொத்தம் 73 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வில் 122 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9,625 பேரும், மாணவிகள் 9,989 பேரும் என மொத்தம் 19,614 பேர் தேர்வு எழுதினர். 

தடையில்லா மின்சாரம்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பிளஸ்-2 தேர்வு தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாக தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு, நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் நிலையான பறக்கும் படை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்