எஸ்.ஐ. தேர்வு முறைகேடு; துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சில போலீஸ் அதிகாரிகள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Update: 2022-05-05 16:13 GMT
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சில போலீஸ் அதிகாரிகள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பா.ஜனதா பெண் பிரமுகரான திவ்யா காகரகி, காங்கிரஸ் பிரமுகர்கள் மகாந்தேஷ் பட்டீல், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல், நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத், போலீஸ்காரர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் நியமன பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகிய 2 பேரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு விவகார விசாரணையை சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அதாவது முறைகேட்டிற்கு பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

துணை போலீஸ் சூப்பிரண்டு

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
அதாவது கலபுரகி மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா பிரமுகருக்கு சொந்தமான பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய கலபுரகி மாவட்ட கைரேகை நிபுணர் குழுவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஒசமணி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரான திலீப் சாகர் ஆகிய 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது அவர்கள் 2 பேரும் பணியில் அலட்சியமாக இருந்தது, தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெற்றதை தடுக்காமல் இருந்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் 5 போலீசார்...

அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றிருந்த போலீஸ்காரர்கள் 5 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மமதேஷ் கவுடா, கஜேந்திரா, யஷ்வந்த் கவுடா, தேசாய், ருத்ரேகவுடா ஆகிய 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். 

போலீஸ்காரர்களாக இருந்து கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதி இருந்தார்கள். இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 5 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ைகதாக வாய்ப்பு

இவர்கள் தேசாய், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான எம்.ஒய்.பட்டீலின் பாதுகாவலராக பணியாற்றி வந்திருந்தார். ஒட்டு மொத்தமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தேர்வு முறைகேட்டில் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருவதால், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட போலீசார் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்