`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே கூனியூரில் சாலைப்பணிகள் பல நாட்களாக நடைபெறுவதால் அந்த பகுதியில் புழுதி பறப்பதாகவும், எனவே, சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், கூனியூரை சேர்ந்த முருகன் என்பவர் `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று முன்தினம் செய்தியாக பிரசுரம் ஆனது. இந்த புகாருக்கு உடனடி தீர்வாக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்ைகயால் கூனியூரில் ஒருபகுதியான தெற்குப்பகுதியில் தார்சாலை போடப்பட்டுள்ளது. இதனால் புழுதி பறப்பது குறைந்துள்ளது. கோரிக்கை நிைறவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தார்சாலை வசதி வேண்டும்
களக்காடு நகராட்சி 1-வது வார்டு அம்பேத்கர் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள வடக்கு தெருவில் தார்சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த பகுதியில் தார்சாலை வசதி செய்து தர வேண்டும்.
-இசக்கியப்பா, களக்காடு.
முட்செடிகளால் தொல்லை
கூடங்குளம் அருகே செட்டிகுளத்தில் இருந்து கொக்கனேரி செல்ல சாலை உள்ளது. இந்த சாலையில் தற்போது முட்செடிகள் படர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வதே பெரும் சவாலாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொல்லை தரும் முட்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-ஏ.சி.லிங்கம், செட்டிகுளம்.
சாலையில் ஓடும் கழிவுநீர்
பாளையங்கோட்டை தாலுகா உடையார்குளம் கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகில் கழிவுநீர் ஓடை உடைந்து சாலையில் செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிலை உள்ளது. மழைக்காலங்களில் மக்களுக்கு தொற்று ஏற்படுகிறது. எனவே, இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், உடையார்குளம்.
ஆபத்தான வளைவு
அம்பை அருகே மன்னார்கோவில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை, `எஸ்' போன்று ஆபத்தான வளைவாக உள்ளது. அந்த வளைவு பகுதியில் சாலையின் இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை இல்லை. இதனால் அந்த வளைவு பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த ஆபத்தான வளைவு பகுதியில் இருபுறமும் எச்சரிக்கை பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-திருக்குமரன், கடையம்.
சாக்கடை நீரால் மக்கள் அவதி
பாளையங்கோட்டை தாலுகா சீவலப்பேரி சிவன் கோவில் வடக்கு தெருவில் சாக்கடை நீர் பெருகி நிற்கிறது. இதனால் தெருவை கடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறுகுழந்தைகள் அதில் விழுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இதில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
-ஐசக்பாண்டியன், சீவலப்பேரி.
வீணாகும் குடிநீர்
தென்காசி மாவட்டம் மேலகரம் கிராமம் ஓம்சக்தி கோவில் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த நிலை நீடித்து வருகிறது. எனவே, குழாயை சரிசெய்து குடிநீர் வெளியேறாமல் தடுக்க வேண்டுகிறேன்.
-ஜெயக்குமார், மேலகரம்.
பஸ்கள் உள்ளே வர வேண்டும்
நெல்லையில் இருந்து தென்காசி செல்லக்கூடிய பெரும்பாலான பஸ்கள் ஆலங்குளம் புதிய பஸ் நிலையத்திற்குள் இரவு 9 மணிக்கு பின்னர் வருவதில்லை. பஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையத்திற்குள் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். மேலும், மழைக்காலங்களில் பஸ்நிலையத்திற்கு வெளியே பயணிகள் நிற்பதில் சிரமமாக உள்ளது. போதிய வெளிச்சமின்றி இருட்டாகவும் உள்ளது. எனவே, எந்த நேரமாக இருந்தாலும் அரசு பஸ்கள் அந்த பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-வெட்டும்பெருமாள், ஆலங்குளம்.
ஆபத்தான மின்கம்பம்
குலசேகரன்பட்டினம் கெங்கை சுடலைமாடசாமி கோவில் அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, குலசேகரன்பட்டினம்.
மின்வசதி இல்லாத ஏ.டி.எம்.
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மின்விளக்கு வசதி இல்லாமல் இருட்டாக உள்ளது. இரவு நேரங்களில் பணம் எடுக்க வருபவர்கள் செல்போனில் விளக்கை எரியவிட்டு பணம் எடுத்துச்செல்கிறார்கள். எனவே, ஏ.டி.எம்-ல் மின்விளக்கு வசதி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
-விஜயன், தூத்துக்குடி.
வேத்தடை அமையுமா?
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் பெரும்பாலான வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இந்த பகுதியில் பள்ளி, ஆலயம் உள்ளது. எனவே, அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-குணசேகர், குலசேகரன்பட்டினம்.
---------------