போலீஸ் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவது சரியல்ல; பசவராஜ் பொம்மை பேட்டி

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுவது சரியல்ல என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-05-05 15:46 GMT
பெங்களூரு:

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குற்றம்சாட்ட வேண்டாம்

  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் மீது காங்கிரசார் குற்றம்சாட்டுகிறார்கள். குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும். ஆதாரங்கள் இல்லாமல் புகார் கூறுவது சரியல்ல. குற்றம்சாட்டிவிட்டு ஓடி ஒளிந்து கொள்வது ஏற்புடையது அல்ல. அஸ்வத் நாராயணுக்கு எதிராக என்ன ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்.

  அரசியல் நோக்கத்திற்காக குற்றம்சாட்ட வேண்டாம். ஆதாரமின்றி கூறப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்புவார்களா?. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அது காங்கிரசாருக்கே தெரியும். அதனால் அவர்கள் எங்கள் அரசு மீது குறை சொல்லக்கூடாது. நாங்கள் இந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டை தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

விட மாட்டோம்

  இதில் காங்கிரஸ் கட்சியை சோந்த சிலரும் சிக்கியுள்ளனர். தங்களின் சாயம் வெளுத்துவிடுமோ என்று பயந்து காங்கிரசார் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களை விட மாட்டோம். இந்த முறைகேடு குறித்து பாரபட்சமின்றி நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் காரணமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எத்தனை பேர் கைது செய்ய்பட்டனர். அந்த ஊழல்கள் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை. எல்லா ஊழல்களும் மூடிமறைக்கப்பட்டன.

ராகி கொள்முதல்

  அவர்கள் தான் தற்ேபாது எங்கள் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராகி கொள்முதலுக்கான பெயர் பதிவு பணி நாளை (இன்று) முதல் தொடங்குகிறது. கூடுதலாக 2 லட்சம் டன் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்