தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் 15 குடும்பத்தினர் தர்ணா போராட்டம்
ஏரல் அருகே தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 15 குடும்பத்தினர் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
ஏரல் அருகே தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 15 குடும்பத்தினர் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆலடியூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் முனியராஜன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் அங்கு திடீரென தங்கள் ரேஷன் கார்டுகளை தரையில் பரப்பி வைத்து, அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் குடும்பத்தினர் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் ஆலடியூர் கிராமத்தில் 4 தலைமுறையாக மண்பாண்டம் தொழில் செய்து வருகிறோம். இந்த ஊரில் சுமார் 65 குடும்பங்கள் உள்ளன. இதில் 15 குடும்பத்தினரை மட்டும் கோவில் விழாக்களில் பங்கேற்க விடாமல் சிலர் ஒதுக்கி வைத்து உள்ளனர். எங்கள் குடும்ப நிகழ்ச்சியிலும் யாரையும் பங்கேற்க விடாமல் தடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இது தொடர்பாக போலீசில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை கோவில் வழிபாட்டுக்கு தடை செய்வதாலும், சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமலும் தவிக்கிறோம். இதனால் எங்களது ரேஷன் கார்டுகளை அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்து உள்ளோம். ஆகையால் தாங்கள் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.