அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
குன்னூர் அருகே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
குன்னூர்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள உபதலையில் அரசு தொடக்க பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரிய-ஆசிரியைகள் குழுவினர் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இதன்தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
பேரணியை அருவங்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி அம்பிகாபுரத்தில் இருந்து தொடங்கி உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிந்தது.இதில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐயரின்ரெஜி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.