சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; வடமாநில தொழிலாளி பலி
கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில தொழிலாளி ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில தொழிலாளி ஒருவர் பலியானார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுற்றுலா வேன் கவிழ்ந்தது
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 40 தொழிலாளர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 3-ந் தேதி பெருந்துறையில் இருந்து வாடகை வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். வேனை பெருந்துறையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) ஓட்டினார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பெருந்துறைக்கு திரும்பினர். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா வேன்கள் சென்று கொண்டிருந்தன.
மாமரம் கிராமம் அருகே சென்றபோது சுற்றுலா வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து வேன் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தொழிலாளி பலி
இந்த விபத்தில் வேனின் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அபய குரல் எழுப்பினர். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் வேனில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் இம்ரான் நாசர் (18) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் செந்தில்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
10 பேர் காயம்
படுகாயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:- டிரைவர் செந்தில் குமார், அவருடைய மகன் அய்யப்பன் (14), சையதுல்காஜி (48), அப்துல் ரஹீம் (20), முகமது சேட் (35), சுரேஷ் காஜி (23), சுகுணா பீவி (25), ஜாகிர் உசேன் (32), நசீர் உசேன் (28), நூர் முகமது (28) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.