அரசின் ஓராண்டு சாதனை திட்டங்கள் குறித்து 10 நாட்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு-கலெக்டர் தகவல்

அரசின் ஓராண்டு சாதனை திட்டங்கள் குறித்து 10 நாட்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-04 22:24 GMT
சேலம்:
அரசின் ஓராண்டு சாதனை திட்டங்கள் குறித்து 10 நாட்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் திட்டங்கள் குறித்து சேலம் மாவட்டத்தில் 10 நாட்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று 6.5.2022 அன்று ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அரசின் ஓராண்டு சாதனைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து பயன்பெறும் வகையில் 10 நாட்களுக்கு அரசின் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலை நிகழ்ச்சிகள்
அந்த வகையில் 7-ந் தேதி ஓராண்டு சாதனை மலர் வெளியிடுதல், தொடர்ந்து இந்த மாதத்தில் ஓராண்டு சாதனை குறித்த புகைப்பட கண்காட்சி, அனைத்து அரசுத்துறையினர் பங்கேற்கும் பல்துறை பணி விளக்க முகாம், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடக்கிறது.
மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரே நாளில் கொளத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மலைக்கிராமங்களில் சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்று பெறும் வகையில் வருவாய்த்துறையினர் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
சிறப்பு முகாம்கள்
அனைத்து வட்டாரங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சேலம் மாவட்டத்தில் தற்பொழுது பணிபுரிந்துவரும் அலுவலர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு நடத்திடவும், சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மண் பரிசோதனை சிறப்பு முகாம், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோடைகாலங்களில் கால்நடைகளை நோய் தாக்கத்தில் இருந்து பராமரிப்பு தொடர்பான சிறப்பு முகாம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
கண்காட்சி அரங்குகள்
மரக்கன்றுகள் நடவு செய்தல், சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் மாநகராட்சி திடலில் ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும், பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மை துறை இணை இயக்குனர் கணேசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்