தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான பள்ளி கட்டிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடத்தை ஒட்டி மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இந்த கட்டிடம் சேதமடைகிறது. இந்த மரங்கள் கட்டிடத்தின் மீது எப்பொது வேண்டுமானாலும் விழுந்து விடும்நிலை உள்ளது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிசாமி, வாடமங்கலம், கிருஷ்ணகிரி.
===
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தண்டகுப்பம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மின் கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்ந்த நிலையில் இருக்கிறது. சில நாட்களாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் முன் இதனை சீரமைக்க மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, தண்டகுப்பம், அரூர்.
===
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து குருசாமிபாளையத்துக்கு மினிபஸ் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்களுக்கு பயன் உள்ளதாக அமைந்தது. இந்நிலையில் பல மாதங்களாக அந்த மினிபஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு 2 பஸ் ஏறி செல்ல வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் மினிபஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காசிபெருமாள், வெண்ணந்தூர், நாமக்கல்.
===
போக்குவரத்து நெரிசல்
சேலம் மாநகரில் காலை, மாலை நேரங்களில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் மார்க்கத்தில் செல்லும் டவுன் பஸ்கள் தவிர்த்து மற்ற அனைத்து பஸ்களையும் மேம்பாலம் வழியாக செல்லவும், அதேபோல் ஓமலூர் மார்க்கத்திலிருந்து சேலம் வரும் பஸ்களை மேம்பாலத்தில் மட்டும் செல்லவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான், குப்தாநகர, சேலம்.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் கருங்கல்பட்டி 56-வது வார்டு தனியார் மண்டபம் அருகே தினமும் குப்பைகள் அள்ளாததால் குவிந்து கிடக்கின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்துள்ள குப்பைகளை அள்ளி, அங்கு குப்பைதொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-ரங்கநாதன், கருங்கல்பட்டி, சேலம்.
===
ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்
சேலம் மாநகரத்தில் முக்கிய பகுதிகளில் சாலையோரம் பல மாதங்களாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேனர்கள் விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக ராஜகணபதி கோவில் எதிரில் 2 மாதங்களாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
===
காட்சி பொருளான குடிநீர்தொட்டி
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்த காந்தி நகர் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2 நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளன. இது பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் காட்சி பொருளாகவே காணப்படுகின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து 2 குடிநீர் தொட்டிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்மக்கள், தம்மம்பட்டி, சேலம்.