குமரி மாவட்டத்தில் ‘பீர்’ விற்பனை படுஜோர்

அக்னி நட்சத்திர வெப்பத்தால் குமரி மாவட்டத்தில் பீர் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. வழக்கத்தை விட 16 சதவீதம் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

Update: 2022-05-04 20:59 GMT
நாகர்கோவில்:
அக்னி நட்சத்திர வெப்பத்தால் குமரி மாவட்டத்தில் பீர் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. வழக்கத்தை விட 16 சதவீதம் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
மக்கள் தவிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே வழக்கமான வெயிலைவிட, அதிகமாக வெயில் இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறையவில்லை. இடையிடையே மழை பெய்த பிறகும்கூட வெப்பம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் கோடை வெயில் மேலும் மக்களை வாட்டி வருகிறது.
இதனால் மக்கள் வீடுகளில் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தனர். ஒரு நிமிடம் கூட மின்விசிறி துணை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் சில நேரங்களில் மின்வெட்டு ஏற்படும்போது இன்வெர்ட்டர் வசதி இல்லாத மக்கள் படும்பாடு, பெரும்பாடாக இருந்து வருகிறது. குளிர்சாதன வசதி உள்ளவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.
28-ந் தேதி வரை...
இந்த நிலையில் கோடை வெயிலின் உச்சமான அக்னிநட்சத்திரம் (கத்திரி) வெயில் நேற்று தொடங்கியது. இந்த வெயில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாக இருந்த வெயிலைக் காட்டிலும் நேற்று காலையிலேயே வெயிலின் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் உஷ்ணம் இருந்தது.
இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க தலையில் தொப்பி அணிந்தும், பின்னால் அமர்ந்து சென்ற ஆண்களும், பெண்களும் தலையை துண்டு மற்றும் துப்பட்டாவால் மூடியபடியும் சென்றனர். நடந்து சென்ற பலர் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். இந்த கத்திரி வெயில் 28-ந் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
பீர் விற்பனை படுஜோர்
அக்னி நட்சத்திரம் தொடங்கியதை தொடர்ந்து சுட்டெரிக்கும் வெப்பத்தால் மதுபானங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதாவது வெப்பத்தை தணிக்க மதுபிரியர்கள் அதிக அளவில் பீர் வகைகளை வாங்கி அருந்தி வருகிறார்கள். சிலர் பெட்டி, பெட்டியாக பீர் பாட்டில்களை வாங்கிச் சென்று அருந்துகிறார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் ஜில்லென்ற ஐஸ் பீர்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது என்கிறார்கள் டாஸ்மாக் விற்பனையாளர்கள். இதுதொடர்பாக குமரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு கோடை காலத்தில் நடந்த பீர் விற்பனையைவிட இந்த ஆண்டு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மதுபானங்களின் விற்பனை வழக்கத்தைவிட குறைந்துள்ளது. மதுபான விற்பனை மைனஸ் அளவில் இருக்கிறது என்றனர்.
இளநீர்
அதே சமயம் இயற்கை பானங்களை விரும்பி அருந்தி வருகிறார்கள். இதனால் நுங்கு, பதநீர், இளநீர், பழரசம் உள்ளிட்ட குளிர் பானங்களின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முதல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வரை சாலையோரங்களில் உள்ள இளநீர், நுங்கு சர்பத் கடைகளில் வாகனங்களை நிறுத்தி இயற்கை பானங்களை அருந்திச் செல்கிறார்கள். இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை காண முடிந்தது.
வழிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பது குமரி மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதனால் எப்போது மழை பெய்யும்? வெயிலின் உஷ்ணத்தில் இருந்து எப்போது விடுபடலாம்? என்றும் மக்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்