இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி
விருத்தாசலம் அருகே இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி செய்த கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
விருத்தாசலம் அருகே பெலாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் வைத்தும், இறந்தவர்கள் பெயரில் பயிர்க்கடன் பெற்றும் மோசடி நடந்து வருவதாக புகார் எழுந்தது.
இதற்கிடையில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூட்டுறவு சங்க தலைவராக இருந்த சுரேஷ், செயலாளர் மணிமாறன், எழுத்தர் சுப்பிரமணியன், மேற்பார்வையாளர் ராஜசேகர் மற்றும் உறுப்பினர்கள் என 20 பேர் சேர்ந்து இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்றதாகவும், கடன் பெறாத விவசாயிகள் கடன் பெற்றதாகவும் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடியே 59 லட்சத்து 59 ஆயிரத்து 822 மோசடி செய்தது தெரிய வந்தது.
4 பேர் கைது
இது பற்றி கடலூர் மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயலாளர் மணிமாறன், தலைவர் சுரேஷ், எழுத்தர் சுப்பிரமணியன், மேற்பார்வையாளர் ராஜசேகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மற்ற 16 பேரையும் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் எத்தனை விவசாயிகளிடம் இருந்து பணத்தை மோசடி செய்துள்ளனர். அதில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் இந்த மோசடி சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் செயலாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் ஆகிய 3 பேரையும் கூட்டுறவு துறை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.