பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-04 18:39 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்களில் பணிபுரியும் தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கை குறித்து பேசினார். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டில் எம்.ஆர்.பி. தேர்வாணையம் மூலம் 7,243 பேர் செவிலியர்களாக நியமிக்கப்பட்டு தற்போது ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி எம்.ஆர்.பி. செவிலியர்களை நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்-அமைச்சர் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரி அனந்தன், அரசு மருந்தாளுனர் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் ராஜராஜன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பாரதிவளவன், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சிவக்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அருண்குமார் ஆகியோர் செவிலியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முன்னதாக துணைத்தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். முடிவில் செவிலியர் தீபா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்