வருகிற 18-ந் தேதிக்குள் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற வருகிற 18-ந் தேதிக்குள் மனுக்களை வழங்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
1,476 பேருக்கு நிவாரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்கிற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த மனுக்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,476 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது.
முறையீடு செய்யலாம்
மேலே குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.