திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எலச்சிபாளையம்:
புதிய தேர்
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இதை முன்னிட்டு அம்மன் தேர், விநாயகர் தேர், முருகன் தேர், அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேர் ஆகியவை வடம் பிடித்து இழுக்கப்படுவது வழக்கம். இந்த 4 தேர்களும் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
இதில் விநாயகர் மற்றும் அர்த்தநாரீஸ்வரருக்கு புதிய தேர்களை வடிவமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் தேருக்கு ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. 3 டன் இரும்பிலான சக்கரங்கள் மற்றும் அச்சு, 7 டன் இலுப்பை மரத்தில் தேர் வடிவமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வந்தன. தம்பம்பட்டியை சேர்ந்த ஸ்தபதி பால்ராஜ் தலைமையில் பணிகள் நடந்தன.
வெள்ளோட்டம்
புதிய தேர் வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேர் நிலையில் இருந்து விநாயகர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. கோவில் உதவி ஆணையர் சரவணன் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முன்னதாக கைலாசநாதர் கோவிலில் இருந்து கலசம் மற்றும் விநாயகர் சிலையை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
திருச்செங்கோட்டில் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் முடிவில் நிலையை வந்தடைந்தது. தேர் வெள்ளோட்டத்தையொட்டி அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி, ஒன்றிய தலைவர் சுஜாதா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொன் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.