பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது: 82 மையங்களில் ஏற்பாடுகள் தயார்
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி 82 மையங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
நாமக்கல்:
பிளஸ்-2 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அறை அனுமதி சீட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 82 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
பதிவு எண்கள்
இதனிடையே நேற்று மாணவ, மாணவிகளின் பதிவு எண்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளில் எழுதும் பணி நடந்தது. நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகளின் பதிவு எண்களை, ஆசிரிய-ஆசிரியைகள் மேஜைகளில் எழுதினர்.
மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுக்கான பணியில் 10 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துணை அலுவலர்கள், 120 நிரந்தர பறக்கும் படையினர், 1,207 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.