ரெயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்களில் கடத்துவதற்காக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயில் நிலைய பிளாட்பாரத்தின் அருகே ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கடத்துவதற்காக மர்ம நபர்கள் 22 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.