எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்

பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-04 17:36 GMT
கோவை

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசிற்கு அதிக லாபம் ஈட்டி தரும் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க முடிவு செய்து உள்ளது. 

இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவையில் உள்ள எல்.ஐ.சி. தலைமை அலுவலகம் உள்பட பல்வேறு எல்.ஐ.சி. அலுவலகங்களில் 2 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. 

இதனால் அனைத்து எல்.ஐ.சி. அலுவலகங்களிலும் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனைத்து ஊழியர்களும் பணியை புறக்கணித்து அலுவலகத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் எல்.ஐ.சி. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும்  வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை-திருச்சி ரோட்டில் உள்ள பிரதான எல்.ஐ.சி. தலைமை அலுவலகத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க கோவை தலைவர் கஜேந்திரன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் நிர்வாகிகள் கிரிஜா, சுரேஷ், துளசிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்