ஆக்கிரமிப்புகளை 11-ந் தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்
ராணிப்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை 11-ந்் தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை 11-ந்் தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
11-ந் தேதிக்குள்...
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தெரு மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பலவகைப்பட்ட தற்காலிக, நிரந்தர கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் மழைநீர் வடிகால்வாய்களின் மீது மேடைகள் அமைத்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளுக்கு மிகுந்த இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே தெரு, சாலைகள் மற்றும் கால்வாய்களின் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் வருகிற 11-ந் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையெனில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், மேற்படி செலவுத்தொகை அவர்களிடமிருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம்
அதேபோல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருக்கவோ அல்லது தனி நபர்களுக்கு விற்பனை செய்யவோ கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேபோன்று நகராட்சி குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் இணைந்து தண்ணீர் உறிஞ்சினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி ராணிப்பேட்டை நகராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா நகராட்சியாக மாற்றிட பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.