வடசித்தூர் சோளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

நெகமம் அருகே வடசித்தூர் சோளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-05-04 17:28 GMT
நெகமம்

கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே வடசித்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சோளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் நடைபெற்று புதுப்பிக்கப்பட்டது. கோவில் கோபுரம், வளாகத்தில் வர்ணம் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது. 

இதையடுத்து கடந்த 29-ந் தேதி கோவில் கும்பாபிஷேக விழா மங்கல இசையுடன் தொடங்கியது.  கணபதி ஹோமம், மகா சாந்தி ஹோமம், வாஸ்து பூஜை, கோ பூஜை, முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 கடந்த 1-ந் தேதி கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று  முன்தினம் மாலை வரை ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. 

புனிதநீர் ஊற்றினர்

இதையொட்டி அதிகாலை யாகசாலையில் 6-ம் கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டு இருந்த தீர்த்த குடங்கள் மேளதாளங்கள் முழங்க சோளியம்மன் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பின்னர் சோளியம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

சோளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்