ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது முறையாக விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கோவையில் 3-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2022-05-04 17:23 GMT
கோவை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கோவையில் 3-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.

கோடநாடு கொலை, வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது.

 இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா உதவியாளர்

இந்த நிலையில் சசிகலாவிடம் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் போலீசார் 2 நாட்கள் சென்னையில் விசாரணை நடத்தினர். மேலும் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுகுட்டி, அவரது மகன், அவரது தம்பி மகன் உள்ளிட்டோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் கடந்த 29, 30-ந் தேதி  ஆகிய 2 நாட்கள் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.சி.ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கடந்த 2-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

3-வது முறையாக

இந்த நிலையில் நேற்று மீண்டும் 3-வது முறையாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு பூங்குன்றன் ஆஜரானார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? அங்கு என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும்? என்பது குறித்து பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 மேலும் கோடநாடு வழக்கு தொடர்பாக கைதான நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பரிசு பொருள்கள் கோடநாடு பங்களாவில் இருந்ததுதானா? என்பது குறித்தும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்